ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் முதல் வருகிறது புதிய மாற்றம்
Tamil Nadu Pension Update : தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பங்களை, வரும் 2026 நவம்பர் மாதம் முதல் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 24 : தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பங்களை, வரும் 2026 நவம்பர் மாதம் முதல் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு (Tamil Nadu Government ) உத்தரவிட்டுள்ளது. காகித வடிவில் நேரடியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இதுதொடர்பாக, தமிழகக் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் சாருஸ்ரீ அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் அலுவலகம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், ஓய்வூதிய விண்ணப்ப நடைமுறைகளில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரூ.2,500 மகளிர் உரிமை தொகை வழங்க தாமதம் ஏன்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த விளக்கம்.. என்ன அது!
தற்போது சில ஓய்வூதிய விண்ணப்பங்கள் காகித வடிவிலும், சில இணையவழியிலும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காகித வடிவில் நேரடியாக அனுப்பப்பட்ட சில விண்ணப்பங்கள், அவற்றுக்குரிய இணையவழி விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கு முன்பே இறுதி செய்யப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக முதன்மைக் கணக்காயர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய குழப்பங்களைத் தவிர்த்து, அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே சீரான முறையில், உரிய காலத்துக்குள் செயல்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி நவம்பர் 2026 முதல், அனைத்து ஓய்வூதிய விண்ணப்பங்களும் ‘OPPAS’ எனப்படும் இணையவழி ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி முறையின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கும் இதே விதி பொருந்தும். குறிப்பாக 2026 நவம்பர் முதல் காகித வடிவில் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும் எந்த ஓய்வூதிய விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அவை உடனடியாகத் திருப்பி அனுப்பப்படும்.
இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, தேவையான அனைத்து விவரங்களையும் முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். பொருந்தும் இடங்களில், உரிய ஆதார ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அறிவுறுத்தல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சம்பளம் வழங்கும் மற்றும் பட்டுவாடா அலுவலர்களுக்கும் (DDO) தெரிவித்து, அவற்றைத் தவறாமல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் துறைத் தலைவர்களைக் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: நீலகிரிக்கு இன்று அதிகனமழை ரெட் அலர்ட் – இந்த 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் தகவல்
காரணம் என்ன ?
ஏற்கெனவே நேரடியாக காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட சில ஓய்வூதிய விண்ணப்பங்கள், அவற்றுக்குரிய இணையவழி விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு முன்பே இறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் ஓய்வூதிய விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக இனி OPPAS எனப்படும் ஆன்லைன் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி முறையின் மூலமாகவே அனைத்து ஓய்வூதிய விண்ணப்பங்களும் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.