மினி பஸ்ஸாக மாறும் மேக்ஸி கேப் வேன்கள்.. தமிழக அரசின் புது முடிவு!
Mini Bus Service: தமிழ்நாடு அரசு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, 12-16 இருக்கைகள் கொண்ட மேக்ஸி கேப் வகை வேன்களை மினி பேருந்துகளாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, செப்டம்பர் 13: மேக்ஸி கேப் வகை வேன் வாகனங்களை மினி பேருந்துகளாக பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பேருந்து சேவை என்பது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல்வேறு கட்டணம் வாரியாக இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மகளிர் இலவச பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது. இதனை தவிர்த்து தனியார் பேருந்துகளின் சேவையும் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. ஆனால் நகரங்களில் பேருந்து சேவை என்பது சுலபமாக கிடைக்கும் நிலையில் கிராமங்களில் பேருந்து சேவை என்பது குறிப்பிட்ட மணிக்கு ஒரு முறை மட்டுமே இருந்து வருகிறது. இதனை மாற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இப்படியான நிலையில் 2025 ஜூன் மாதம் தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் 100 குடும்பங்களுக்கும் மேல் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவை எளிதாக கிடைக்கும் வகையில் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்தில் பெரிய அளவில் மினி பேருந்துகளை இயக்க யாரும் முன் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களே கவனிங்க.. 72 இடங்களில் மினி பேருந்து சேவை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?




அதன்படி மேக்சி கேப் வகை 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 155 சென்டிமீட்டர் என்பது திருத்தப்பட்டுள்ளது. அதாவது 150 முதல் 200 சென்டிமீட்டர் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பேருந்துகள் 200 செ.மீ., உயரமும் அமர்ந்து கொண்டு பயணிக்கும் வாகனங்கள் சுமார் 150 முதல் 200 செ.மீ., உயரமும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணம்.. டோக்கன் எப்படி வாங்கலாம்?
அதே நேரம் வேன்களில் நின்று கொண்டு பயணம் செய்வதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலை கிராம மக்கள் தங்கள் ஊரக பகுதிகளுக்கு செல்ல பேருந்து சேவை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பேருந்து சேவை இல்லாத கிராமங்களுக்கு ஆட்டோ மற்றும் வேன்கள் சேவையாற்றி வருகின்றன. இதில் சில இடங்களில் அனுமதி இல்லாமல் நடப்பதால் அதனை முறைப்படுத்தும் பணிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.