வடபழனி முருகன் கோயில் அருகே திருமண மண்டபம்.. அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
Vadapalani Murugan Temple: சென்னை வடபழனி முருகன் கோவிலில், வள்ளி திருமண மண்டபம் அருகே புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்கும், தெய்வானை திருமண மண்டபம் அருகே பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைத்துறைக்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை, செப்டம்பர் 12, 2025: சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்த மனு மீது இந்து சமய அறநிலையத்துறை விசாரணை செய்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருக பக்தரான வி.பாண்டியராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை வடபழனி முருகன் கோவிலில், வள்ளி திருமண மண்டபம் அருகே புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்கும், தெய்வானை திருமண மண்டபம் அருகே பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கும் இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி என்ன?
கோவிலில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடத்தப்பட்டதால், அப்பகுதி மிகவும் நெரிசலாகி, பக்தர்கள், பொதுமக்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியதால், கோவிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாகன நிறுத்துமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், இந்த இரு மண்டப வளாகங்களில் 300 நான்கு சக்கர வாகனங்களையும், 500 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்துக்கூடிய சூழல் உள்ளபோது, புதிதாக திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டால், மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? விரைவு ரயில்களில் வந்த மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
பக்தர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்படும் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக வீணடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், புதிய கட்டுமானங்களுக்கான முடிவுகளை கைவிடக் கோரி கடந்த மார்ச் மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காததால், அதை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
வழக்கை முடித்து வைத்த நீதிபதி:
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருளமுருகன் ஆகியோர், மனுதாரரின் புகார் மீது கடந்த மே மாதம் விசாரணை தொடங்கப்பட்டு அதற்கு மனுதாரரையும் அழைத்துள்ள நிலையில், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறமுடியாது என தெளிவுபடுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
எனவே மேற்கொண்டு இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்க அவசியம் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைப்பதாக கூறிய நீதிபதிகள், மனுதாரரின் புகாரை வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர் முறையாக விசாரித்து, மூன்று வாரங்களுக்குள் இந்துசமய அறநிலையத் துறை ஆணையரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையைப் பொறுத்து, தேவைப்பட்டால் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.