Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 இறுதி நாள்

Tamil Nadu Engineering 2025-26 Admissions Open: தமிழ்நாட்டில் 2025-26 பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 2025 மே 7 முதல் ஜூன் 6 வரை தொடர்கின்றன. 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர், இதில் 2.21 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 இறுதி நாள்
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 03 Jun 2025 10:43 AM

சென்னை ஜூன் 03: தமிழ்நாட்டில் (Tamilnadu) 2025-26 பொறியியல் சேர்க்கைக்கான (For Engineering Admission 2025-26 in Tamil Nadu) ஆன்லைன் விண்ணப்ப பதிவு 2025 மே 7ஆம் தேதி தொடங்கி, 2025 ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது வரை 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2.21 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உறுதி செய்துள்ளனர். மாநிலத்தின் 11 அரசு கல்லூரிகளில் புதிய 12 பாடப்பிரிவுகள் தொடங்கி, 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டில் 54 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான 2 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு

தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 2025 மே 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் 2-ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தமாக 2,81,266 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,20,807 ஆண் மாணவர்கள், 1,00,579 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 2,21,386 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து உள்ளனர்.

வரும் 2025 ஜூன் 6-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அதையடுத்து, மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் வரும் 2025 ஜூன் 6-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள 110 மாணவர் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். அதற்காக, 1800-425-0110 என்ற இலவச உதவிக்கோள் எண் மற்றும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 இடங்கள் வழங்கப்படுகின்றன.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 95.03% மாணவர்கள் தேர்ச்சி

முன்னதாக, இந்த ஆண்டின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 மே 8-ஆம் தேதி வெளியானதில், 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து உயர்கல்விக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் 2.53 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இவ்வாண்டு தற்போது வரை 2.74 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இது, மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்புக்கான ஆர்வம் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் தற்போது 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழகத் துறைக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இவற்றில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட உள்ளது.