Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Nov 2025 12:33 PM IST

திருச்சி, நவம்பர் 10, 2025: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் போட திட்டமிட்டுள்ளார்கள். டெல்லி பிக் பாஸ் கூறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆமாம்சாமி போட்டு தான் ஆக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் விஜயபாரதிக்கும் திருச்சியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் திருமணம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி – மனிஷாவை வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன், திமுக துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் என பலர் கலந்து கொண்டர்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயங்கிக்கொண்டு இருப்போம் – முதல்வர் ஸ்டாலின்:

இந்த நிகழ்வில், மணக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனியாண்டி திருமணத்தை கலைஞர் நடத்தி வைத்தார். பழனியாண்டி சகோதரர் திருமணத்தையும் பழனியாண்டி மூத்த மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்தேன். தற்போது அவரின் இளைய மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்துள்ளேன். பழனியாண்டி பேரன், பேத்திகள் திருமணத்தையும் நான் நடத்தி வைப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது .

மேலும் படிக்க: வாக்காளர் கணக்கீட்டு படிவம்: ஆன்லைனிலும் நிரப்பலாம்.. எப்படி தெரியுமா?

திமுகவை கழகம் என்று மட்டுமல்ல இயக்கம் என கூறுவார்கள். இயக்கம் என்பது நமக்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பது தான் இயக்கம். உடன்பிறப்பே வா நிகழ்வை நடத்தி வருகிறோம். அந்த நிகழ்வில் திமுகவினர் தெரிவிக்கும் மகிழ்ச்சி எனக்கு ஊக்கமாக இருக்கிறது.

திமுகவை அழிக்க முடியாது:

எதிரிகள் நம்மை வீழ்த்த புது புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரி துறை, சி.பி.ஐ ஆயுதமாக ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்கப்பார்க்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் நடக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு போதும் அது நடக்காது. திமுகவை அவர்களால் அழிக்க முடியாது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க என்ன கூறினாலும் அதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள்.

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி:


அவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க அதிமுகவினருக்கு துணிச்சல் இல்லை. எஸ்.ஐ.ஆரை ஆதரித்த அவர்கள் தற்போது எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக போட்ட வழக்கில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள் என்றால் அவர்கள் கபட நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். டெல்லியில் இருக்கும் பிக் பாஸ்க்கு பழனிச்சாமி ஆமாம்சாமி போட்டு தான் ஆக வேண்டும்.

இங்கு பேசிய செல்வக்குமார், முத்தரையர் சமுதாயத்தினர் மீது கடைக்கண் பார்வையை திருப்புங்கள் என்றார். ஆனால் எல்லா பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் இந்த ஆட்சி நடந்து கொண்டுள்ளது. இந்த ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.
திமுகவிற்கு தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாயை பழனியாண்டி வழங்கி உள்ளார். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்னும் அதிகமாக தருவார் என நம்புகிறோம் என்றார்.