அமைச்சரவையில் இலாகா மாற்றம்.. துரைமுருகன், ரகுபதிக்கு மாறிய துறைகள்.. பின்னணி என்ன?
Tamil Nadu Cabinet Portfolio Reshuffle : தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் வகித்த வந்த இலாகா, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 08: தமிழக அமைச்சரவையில் (Tamil Nadu Cabinet Portfolio Reshuffle) மீண்டும் இலாகா மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் வகித்த வந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவருக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதி வசம் ஒப்படைக்கப்பட்டடது. இதன் மூலம், துரைமுருகன் நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையும் கவனிப்பார் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன், ரகுபதிக்கு மாறிய துறைகள்
தமிழக அமைச்சரவையில் அண்மையில் தான் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, பொன்முடி அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே, பொன்முடி வகித்து வந்த வனத்துறை, ராஜகண்ணப்பனுக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படி பல மாற்றங்கள் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது திமுக.
இந்த நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் இலாகவை ஸ்டாலின் மாற்றியுள்ளார். அதாவது, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் ரகுதிபயிடம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். மூத்த அமைச்சரான துரைமுருகன் பதவி மாற்றப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் துரைமுருகன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?
திமுகவில் மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர் நீர்வளத்துறையுடன், கனிம வளத்துறை கவனித்து வந்தார். கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் அமைச்சரவையில் மிக முக்கிய துறைகள். இது துரைமுருகன் வசம் இருந்தது. இதற்கிடையில், மணல் கொள்கை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதே நேரத்தில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து துரைமுரகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இது பெரிதாக வெடித்ததை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு, கட்சியின் அறிவிப்பு பொதுச் செயலாளர் பெயரில் தான் வெளியிடப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் வந்த அறிவிப்புகள் முதல்வர் ஸ்டாலின் பெயரில் தான் வந்தது. இதன் மூலம், முதல்வர் ஸ்டாலின் துரைமுருகன் முது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து தான், தற்போது துரைமுருகனின் முக்கிய பதவி பறிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.