மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Amrit Bharat Train: தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான அம்ரித் பாரத் ரயிலானது வருகிற ஜனவரி 28- ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதே போல, மறு மார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி 29- ஆம் தேதி புறப்படுகிறது.

ஜனவரி 298 இல் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை
கேரள மாநிலம், திருவனந்தபுரம்- தாம்பரம் இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது வருகிற ஜனவரி 28- ஆம் தேதி ( புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்: 16121) மறுநாள் ஜனவரி 29- ஆம் தேதி ( வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இதே போல, மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து, சென்ட்ரல்- தாம்பரம் அம்ரித் பாரத் ( வண்டி எண்: 06122) வருகிற ஜனவரி 29- ஆம் தேதி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11:45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் சேவை
இந்த வாராந்திர அம்ரித் பாரத் ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் வகையில், அதிவேக ரயிலான அம்ரித் பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதன்படி, திருவனந்தபுரம்- தாம்பரம் இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.
மேலும் படிக்க: இனப்பெருக்க காலம்…கடற்கரைக்கு படையெடுக்கும் கடல் ஆமைகள்…உயிரிழப்பை தடுக்க ஆமை விலக்கு சாதனங்கள் அளிப்பு!
ஜனவரி 28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை
அதன்படி, இந்த ரயிலுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயிலானது நாளை மறுநாள் 28- ஆம் தேதி தாம்பரத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயிலில் சாதாரண நடுத்தர மக்கள் பயணிக்கும் வகையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.490 மட்டுமே கட்டணமாகும். இந்த ரயிலில் ஏசி இல்லாத ஸ்லீப்பர் மற்றும் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளிட்டவை உள்ளன.
மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்
இதே போல, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், கழிப்பறைகள், சிசிடிவி கேமரா, ஒவ்வொரு பெட்டிகள் இடையே இணைப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பேண்ட்ரி கார் அல்லது ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இதில், சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு வகையிலான உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கபடுகின்றன. இந்த ரயிலானது மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…தமிழகத்தில் 15 லட்சம் பேர் விண்ணப்பம்!