வாக்காளர் கணக்கீட்டு படிவம்: ஆன்லைனிலும் நிரப்பலாம்.. எப்படி தெரியுமா?
Special Intensive Revision (SIR): இந்த சேவையை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மற்றும் அதே முகவரியில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்படுத்தலாம். அதோடு, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பதையும் தனியே தேடும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஆன்லைனில் வாக்காளர் கணக்கீட்டு படிவம்
சென்னை, நவம்பர் 10: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பான கணக்கீட்டு படிவத்தை இணையதளம் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 4ம் தேதிக்குள் இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒரு மாதத்துக்குள் (டிச.4க்குள்) எப்படி 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சென்று சரி பார்க்க முடியும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி இன்னும் பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Also read: தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
ஆன்லைம் மூலம் SIR படிவத்தை எப்படி நிரப்புவது:
இதையொட்டி, வாக்காளர்கள் வசதிக்காக, தேர்தல் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in வழியே, கணக்கீட்டு படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அவ்வாறு இணையதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.
அதில், உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவுச் சொல் (OTP) அனுப்பப்படும். அந்த கடவுச் சொல்லை உள்ளிட்டவுடன் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சேவையை யாரெல்லாம் பயன்படுத்தலாம்:
குறிப்பாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த இயலும். அதோடு, இந்த சேவையை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மற்றும் அதே முகவரியில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு
அதேசமயம், வீடு வீடாக வந்து SIR படிவங்கள் விநியோகிக்கப்படுகிறது. எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாதவர்கள் எளிதாக ஆன்லைன் மூலமும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க ஏதுவாக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டிச.9ல் வரைவு வாக்காளர் பட்டியல்:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். தொடர்ந்து, ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் ஜனவரி 31க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.