Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?

Parasakthi Sparks Congress Controversy: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான காட்சிகள் வசனங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் அக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?
காங்கிரஸ் படத்தால் சர்ச்சை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jan 2026 15:01 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பராசக்தி (Parasakthi). கடந்த 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் காட்சிகள், வசனங்கள் என 25 இடங்களில் கட் செய்ய தணிக்கைத்துறை அறுவுறுத்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்தது. குறிப்பாக இந்தப் படத்தில் பேரறிஞர் அண்ணா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் தணிக்கைத்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் படம் வெளியான நிலையில் படத்தில் காங்கிரஸ் தொடர்பான வசனம் சர்ச்சையை சந்தித்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம்.

காங்கிரஸ் தொடர்பான வசனத்துக்கு எதிர்ப்பு

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10, 2026 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியல் இருந்தது. அப்போதைய காங்கிரஸ் அரசின் உத்தரவின் பேரில் காவல்துறை எப்படி போராட்டக்காரர்களை ஒடுக்கியது என படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர முடியாது என விமர்சிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : திரைத்துறை ஒன்றிணையும் தருணம்.. ஜனநாயகனுக்கு ஆதரவாக எம்.பி கமல் ஹாசன் அறிக்கை..

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் பதிவு

 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பராசக்தி படம் தோல்வி என சொல்கிறார்கள். ஏன் நம் உழைத்த காசை வீணாக்க வேண்டும் என படத்தை பார்க்கவில்லை என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பதிவில், அந்த வசனம் உண்மையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : ஜன நாயகன் பட சென்சார் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு!

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, பராசக்தி படத்தை தயாரித்தவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். பராசக்தி படத்தில் காங்கிரஸ் கட்சி தான் இந்தியை திணித்ததாகவும், திமுக அதை எதிர்த்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. எனக்கு இந்தி தெரியாது. ஆனால் அந்த குடும்பத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியில் பட்டம் பெற்றிருக்கிறார். தனது பேரனுக்கு ஆங்கிலத்தை விட இந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் பேசினாரா இல்லையா? ஊருக்கு உபதேசம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இந்தி கற்றுக்கொடுக்கிறார்கள் என்றார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பராசக்தி படத்தால் உருவாகியுள்ள சர்ச்சை திமுக – காங்கிரஸ் கூட்டணியை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறும் நிலையில் இந்த சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.