திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 4,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Special Bus : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4,700 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, நவம்பர் 1: புகழ்பெற்ற திருவண்ணாமலை (Thiruvannamalai) அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் தமிழக அரசு அதற்காக பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பெரும் திரளான பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு
தமிழ்நாடு மட்டுமல்லாது, அருகில் உள்ள மாநிலங்களிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் கிரிவலத்திற்கே ஆயிரக்கணக்கானோர் கூடுவதால், அந்த நாள்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிக்க : ORSL, ORS FIT கரைசல்கள் விற்பனைக்கு தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் நடவடிக்கை!
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3, 2025 நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவிலின் உள்ளகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். அதே நாளில் மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளான டிசம்பர் 4, 2025 அன்று பௌர்ணமி கிரிவலம் நடைபெறும்.
பக்தர்களுக்கான சிறப்பு பேருந்து ஏற்பாடு
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நவம்பர் 1, 2025 அன்று நடைபெற்றது. அதில், பக்தர்களின் வசதிக்காக மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலை நகரில் தற்காலிகமாக 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் நாளில், திருவண்ணாமலை நகரத்தில் 4 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகம் சாலை பராமரிப்பு, தண்ணீர் வசதி, மருத்துவ முகாம், காவல் பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : வலுவான புயல் உருவாக வாய்ப்பு.. அடுத்த 2 மாதமும் செம மழை இருக்கு!!
இதற்கிடையில் திருவண்ணாமலையில் ஐப்பசி மாதம் கிரிவலம் மேற்கொள்ள உகந்தம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நவம்பர் 4, 2025 அன்று இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் என திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



