அமித் ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி 2- ஆவது நாளாக சந்திப்பு…தொகுதி பங்கீடு குறித்து பேச்சு?
SP Velumani Meets Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி 2- ஆவது நாளாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அமித் ஷாவுடன் எஸ்பி வேலுமணி சந்திப்பு
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டிருந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் நடை பயணம் என்ற பிரச்சார பேரணி நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 4) புதுக்கோட்டையில் நடைபெற்ற பேரணி நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர், திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று திங்கள்கிழமை ( ஜனவரி 5) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து, பொங்கல் விழாவில் அவர் பங்கேற்றார்.
அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இதனிடையே, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அ தி மு க வின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பின்போது, அதிமுக பாஜக தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அப்போது, சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பது தொடர்பான பட்டியலை வேலுமணியிடம், அமித் ஷா கொடுத்திருந்தாராம். இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றிருந்தது.
மேலும் படிக்க: திமுகவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம்…ஆட்சியில் அதிகார பகிர்வு…காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
மேலும், இன்று திங்கள்கிழமை அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சந்திப்பின்போது, அதிமுக, பா ஜ க தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருவதால் இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
2- ஆவது நாளாக சந்தித்த எஸ்.பி.வேலுமணி
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதும், அ தி மு க பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் எஸ். பி. வேலுமணி பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தேர்தலில் எதிரி-துரோகிக்கு அப்பால் தமிழக மக்களின் நலனே முக்கியம்…டிடிவி தினகரன்!