தீபாவளிக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடலையா? – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Diwali 2025: தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு - திருநெல்வேலி, போத்தனூர் - சென்னை சென்ட்ரல், சென்னை - மங்களூரு சென்ட்ரல் வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, அக்டோபர் 11: 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் மற்றொரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது செங்கல்பட்டு முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் வெளியூரில் உள்ள பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 2 மாதங்களுக்கு முன்னரே வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் செங்கல்பட்டு – திருநெல்வேலி இடையே ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் விரிவாக காணலாம்.
சிறப்பு ரயில்கள்
இந்த சிறப்பு ரயிலானது திருநெல்வேலியில் (06156) இருந்து அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளான செவ்வாய் மற்றும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?
இந்த ரயில்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் இரண்டு 3ம் வகுப்பு ஏசி அடுக்கு பெட்டிகள், ஒரு ஏசி சேர்கார் பெட்டி, 12 உட்கார்ந்த நாற்காலி பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவை இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதேபோல் (வண்டி எண் 06044) போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே எக்ஸ்பிரஸ் ரயிலானது அக்டோபர் 19யான ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 08.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக அக்டோபர் 22 ஆம் தேதியில் மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.00 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
மேலும் சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 20 அன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 08.00 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக மங்களூரு சென்ட்ரல் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 21 அன்று மாலை 4.35 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (அக்டோபர் 22) காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 12ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.