SIR: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.. 70 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு?

SIR tamilnadu: 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையில் இன்று வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 70 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SIR: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.. 70 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு?

கோப்புப் புகைப்படம்

Updated On: 

19 Dec 2025 07:47 AM

 IST

சென்னை, டிசம்பர் 19: தமிழகத்தில் நடந்து முடிந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (special intensive revision) அடிப்படையிலான, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. இதில், 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். பீகாரைத் தொடர்ந்து, எதிர்ப்புகளையும் மீறி தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது.

இதையும் படிக்க : சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

இதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கினர். அதோடு, படிவங்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில், இந்தப் பணிக்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிறைவடைந்த அவகாசங்கள்:

பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் படிவங்களை திருப்பி ஒப்படைக்க கூடுதல் ஒரு வார அவகாசம் வழங்கியது. அதன்படி, டிசம்பர் 11ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. மேலும், இரண்டாவது முறையாக, படிவங்களை ஒப்படைக்க டிச.14 வரை மேலும் 3 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் 100 சதவீதம் வழங்கப்பட்டு, பெரும்பாலான படிவங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

70  லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு?

தற்போது, பதிவேற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன்று(டிசம்பர் 19ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது. 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையில் இன்று வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 70 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், 2026 பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!

1 கோடி வாக்காளர்கள் நீக்கம்:

முன்னதாக, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த இடத்தில் வசிக்காதோர், உயிரிழந்தோர் உள்ளிட்டோரும் அடக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்