SIR | “தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிடக் கூடாது”.. மா.செக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
MKStalin advices to dmk district secretaries: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விஷயத்தில் திமுக மட்டும் தீவிரமாக செயல்பட்டது. அதிமுகவும், பாஜகவும்கூட எதிர்ப்பில் ஈடுபடவில்லை. அதுவே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என்றார். நீக்கப்பட்ட வாக்காளர்களில் நம் ஆதரவாளர்கள் உள்ளனரா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றார்.
சென்னை, டிசம்பர் 22: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு 97 லட்சம் வாக்களர்கள் நீக்கப்பட்ட நிலையில், தகுதியான ஒரு வாக்காளர் விடுபட்டிருந்தால் கூட பட்டியலில் இணைக்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.
இதையும் படிக்க : “சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!
திமுக மா.செ கூட்டம்:
இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து மாவட்ட செயலாளர்களுடனான கூட்டம் நேற்று (டிசம்பர் 21) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து ஸ்டாலின் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இளைஞரணித் தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




முன்கூட்டியே எச்சரித்தோம்:
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் 15% வாக்காளர்கள், அதாவது 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 66 லட்சம் பேர் இடம் பெயர்ந்தவர்கள் என்ற காரணத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிர திருத்தப் பணியை அவசரப்படுத்தினால் பல முறைகேடுகள் நடக்கும், தகுதியான வாக்காளர்கள் பாதிக்கப்படலாம் என முன்கூட்டியே எச்சரித்தோம். ஆனால், இந்த விஷயத்தில் திமுக மட்டும் தீவிரமாக செயல்பட்டது. அதிமுகவும், பாஜகவும்கூட எதிர்ப்பில் ஈடுபடவில்லை. அதுவே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என்றார்.
கவனமாக சரிபார்க்கவும்:
நீக்கப்பட்ட வாக்காளர்களில் நம் ஆதரவாளர்கள் உள்ளனரா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும். 168 தொகுதிகளில், 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதை வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும்.
நீக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே இறந்தவர்கள் தானா, இடம் பெயர்ந்தவர்களா, இரட்டை பதிவு உள்ளவர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஒரே ஒருவராவது தகுதியான வாக்காளர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தாலும், படிவம்–6 நிரப்ப செய்து பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் விடுமுறை – தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?
தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது:
தொடர்ந்து, நம்மை நேர்மையான முறையில் வெல்ல முடியாத சக்திகள், குறுக்கு வழியில் முயற்சிக்கலாம். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் தான் வலிமையான கூட்டணி. வெற்றிக்காக கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும். டெல்லியை எதிர்கொள்ள தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று வலியுறுத்தினார்.