சென்னை, டிசம்பர் 21: கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மற்றும் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவித்துள்ளது. வார இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால் பேருந்துகளில் அதிகமான கூட்டம் ஏற்படும் என்பதால், இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 23, 2025 முதல் டிசம்பர் 25, 2025 தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் பிற முக்கிய ஊர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க : “சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!




எந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு டிசம்பர் 23, 34, 2025 ஆகிய தேதிகளில் 780 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதே போல கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அதேபோல், பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 26, 2025 மற்றும் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, தேவையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. அதிகப்படியான குளிர் இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..
பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாத வகையில், பேருந்து இயக்கம், டிக்கெட் விநியோகம் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. ஆன்லைன் முன்பதிவு வசதியை பயன்படுத்தி பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் மக்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணம் மேற்கொள்ள இந்த சிறப்பு பேருந்து சேவைகள் உதவும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் குற்றச்சாட்டுகள் இருப்பதால் மக்கள் அரசு பேருந்துகளை நம்பியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.