Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவில் இணையும் செங்கோட்டையன்? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!!

செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை. தொடர்ந்து, தீயாக பரவும் இந்த தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவிக்காத பட்சத்தில், நிச்சயம் அவர் தவெகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தவெகவில் இணையும் செங்கோட்டையன்? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!!
விஜய், செங்கோட்டையன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Nov 2025 08:50 AM IST

சென்னை, நவம்பர் 25: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, செங்கோட்டையன் பாணியில் .பன்னீர்செல்வமும் அதிமுக ஒருங்கிணைய டிச.15 வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அவ்வாறு, நடக்கவில்லை என்றால் தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைப்பை கட்சியாக மாற்றுவார் எனத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக அதிமுக ஒருகிணைப்பு குரல் எழுப்பி வந்த செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், செங்கோட்டையன் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்:

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணித்து வருபவர் செங்கோட்டையன். அப்போது இருந்து தொடர்ந்து எம்எல்ஏ பதவி வகித்து வரும் அவர், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியிலும் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அப்படி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த அவரை, எடப்பாடி பழனிசாமி ஒரேநாளில் எந்த கேள்வியும் இல்லாமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட .பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் எழுப்பி, எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்ததே கட்சியில் இருந்து அவர் பதவி பறிபோக முக்கிய காரணமாக இருந்தது.

தொடர்ந்து, தேவர் ஜெயந்தியன்று ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்ததுடன், அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், அதனால்,  அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்றும் அவர் குரல் எழுப்பினார். இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உடன் செங்கோட்டையன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறி, அவர் ஒரே நாளில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு:

இதையடுத்து, தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். அதோடு, அதிமுகவிலும் குடும்ப தலையீடு உள்ளதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் A1  என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், தற்போது வரை அவர் நீதிமன்றம் செல்லவில்லை. மாறாக அவர் அரசியலில் புதிய அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க: கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!!

விஜய் கட்சியில் இணையும் செங்கோட்டையன்?

அந்தவகையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, வரும் நவ.27ஆம் தேதி விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை. அரசியல் விமர்சகர்கள் சிலர் இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.