கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!!
சம்பவ இடத்தை மீளாய்வு செய்வது வரும் சிபிஐ அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள், பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தையும் போலீசாரிடமும், தவெக நிர்வாகிகளிடம் இருந்தும் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு, தனித்தனி சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஒப்பிட்டு விசாரணை முடிவுகளை தயார் செய்து வருகின்றனர்.
கரூர், நவம்பர் 24: கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பங்கேற்ற கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கூட்டநெரிசல் ஏற்பட யார் காரணம் என்பது குறித்து பெரும் விவாதம் ஏற்பட்டது. தவெக தரப்பில் சரியான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என ஆளும் திமுக அரசும், அரசு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பிலும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!
வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை:
அதன்படி, இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், பல்வேறு பிரிவினரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு இருந்த பொதுமக்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழ்வு நடைபெற்ற போது செயல்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர்கள் சிபிஐ முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.




கூடுதலாக, சம்பவ இடத்தில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. அதோடு, சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் சிபிஐ தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
தவெக நிர்வாகிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்:
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரும் சிபிஐ முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகள் தங்களது விளக்கங்களையும் சமர்ப்பித்து வருகின்றனர்.