திமுகவை எதிர்த்து செங்கோட்டையன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை: இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
Edappadi palaniswami Accuse Sengottaiyan: அதிமுகவுக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோடநாட்டில் 2, 3 கொலை நடந்ததாக கூறுவதில் இருந்தே, செங்கோட்டையன் எவ்வளவு வன்மத்துடன் இருந்துள்ளார் என்பது வெளிபட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார்.
சேலம், நவம்பர் 01: அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கோடநாடு கொலை வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்க மறுப்பதாகவும், கட்சியின் தொடர் தோல்விகளுக்கு அவரே காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும், அவர் குறிப்பிடுபவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, நீக்கப்பட்டவர்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்:
தேவர் ஜெயந்தியன்று, செங்கோட்டையன் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் வெளிப்படையாகவே தோன்றியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமித்திருந்தார்.
Also read: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
அதிமுகவின் தொடர் தோல்வி:
தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அடிப்படை விதிகளை மீறி, சர்வாதிகாரமாக எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், கட்சியில் சீனியர் என்ற முறையில் தனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் என்று வேதனை தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த தேர்தல்களில், ஒருமுறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்று சுட்டிகாட்டினார். தேவர் ஜெயந்தியில் தான் கலந்து கொண்டதற்கான பரிசாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
பதிலடி கொடுத்த இபிஎஸ்:
செங்கோட்டையன் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தான் முதல்வரான பின் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் நியமித்ததாகவும் கூறிய அவர், திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
திமுகவின் பி டீம் செங்கோட்டைன்:
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை என்றும் சட்டப் பேரவையில் திமுகவை எதிர்த்து செங்கோட்டையன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை எனவும் சாடினார். பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால், அவரை நீக்காமல் என்ன செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 2026ம் தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம். செங்கோட்டையன் கடந்த 6 மாதமாக கட்சிக்கு எதிராக தான் இருந்தார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.



