“கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் தான் A1” செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!
Sengottaiyan blame Edappadi Palaniswami: தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பதவிக்கு வந்தது முதல் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதாகவும், சர்வாதிகார போக்குடன் கட்சியில் அவர் செயல்பட்டு வருவதாகவும் சாடியுள்ளார்.
ஈரோடு, நவம்பர் 01: தேவர் ஜெயந்தியில் தான் கலந்து கொண்டதற்கான பரிசாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்.30) நடந்தது. அதில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அதிமுகவை ஒன்றிணைக்க சட்டமன்ற தேர்தலில் மூவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்.
ஏற்கெனவே, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்ததற்காக அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் மட்டுமே அவர் உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் வெளிப்படையாகவே தோன்றியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதோடு, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமித்திருந்தார்.
இபிஎஸ்-ஐ நானே பரிந்துரைத்தேன்:
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதிமுக வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்றார். ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார். இதுபோல 2 முறை தனக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தும், கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக விட்டு கொடுத்ததாக கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியை தானே பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Also read: “செங்கோட்டையனை நீக்கியது சிறுபிள்ளைத்தனம்” – எடப்பாடியை விளாசிய சசிகலா!
அதிமுகவுக்கு தொடர் தோல்வி:
மேலும், எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொறுப்பேற்ற பின்னர் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஒருமுறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்று சுட்டிகாட்டினார். ஜெயலலிதா ஒரு முறை தோல்வி அடைந்தால், மறுமுறை வெற்றியை பெறுபவர். எடப்பாடியால் வெற்றியை பெற முடியவில்லை என்பதாலேயே, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்து தெரிவித்ததாகவும் கூறினார்.
இபிஎஸ் தான் A1:
அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கருத்து கூறியதும், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். என்னை ‘பி’ டீம் என்கிறார். யார் பி டீம் என நாடறியும் என்று கூறிய அவர், நான் ‘பி’ டீமில் இல்லை. A1ல் எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார் என்றும் விமர்சித்தார். மேலும், துரோகம் செய்வதில் பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து குரல் கொடுக்காது ஏன்? எனவும் கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிசாமி தான் A1ஆக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றார்.



