Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!

Kanchipuram School Student : காஞ்சீபுரத்தில் நாய் கடித்ததை பெற்றோரிடம் தெரிவித்தால் திட்டுவார்கள் என அஞ்சி அதனை மறத்த பள்ளி மாணவர் 3 மாதங்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழப்பு .

நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!
தெருநாய் கடித்து பள்ளி மாணவர் உயிரிழப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 22 Jan 2026 07:15 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், இவர் தனது மகன் சபரிவாசன் (15 வயது) என்பவருடன் வசித்து வந்தார். சபரி வாசன் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சபரி வாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாணவர் சபரிவாசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது, அவரது ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்த போது, ரேபிஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் சபரிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சபரிவாசனை கடித்த வெறிநாய்

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சபரி வாசன் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடீரென சபரிவாசன் மற்றும் அவரது நண்பர்களை விரட்ட தொடங்கியது. அப்போது, மற்ற நண்பர்கள் தப்பித்த நிலையில், சபரி வாசன் மட்டும் தெரு நாயிடம் மாட்டிக் கொண்டார்.

மேலும் படிக்க: கடும் குளிர்.. தர்மபுரியில் 16 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை.. தமிழகத்தில் தொடரும் பனிமூட்டம்..

தந்தையிடம் தெரிவிக்காமல் மறைத்த மாணவர்

அப்போது, சபரி வாசனை அந்த தெரு நாய் காலில் கடித்துள்ளது. இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தந்தை பாஸ்கரிடம் கூறினால், தன்னை திட்டுவார் என பயந்து சபரிவாசன் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். ஆனால், தனது பாட்டியிடம் தெரு நாய் கடித்தது குறித்து தெரிவித்துள்ளார். இதற்கு, அவரது பாட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல், பச்சிலை மூலிகையை காலில் கட்டி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. 3 மாதங்கள் ஆகியும் நாய் கடிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் மாணவர் சபரி வாசனை ரேபிஸ் நோய் பாதித்துள்ளது.

நாய் போல செய்கை

இதனால், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டவுடன், தண்ணீரைக் கண்டு அஞ்சுவதும், நாய் போன்று செய்கை செய்வது போல அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது தந்தை பாஸ்கர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதுதான் நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தது தெரிய வந்தது. தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் நாய் கடியால் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வேகமாக பரவும் சிக்குன்குனியா.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை.. மக்களே அலர்ட்!!