சென்னையில் அதிகாலையில் பயங்கரம்…தொழிலதிபர் வீட்டில் 4 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை!
Chennai Crime: சென்னையில் அதிகாலையில் தொழிலதிபர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 4 பேரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
சென்னை புழல் அருகே உள்ள கிழக்கு காவாங்கரை திருநீலகண்டர் நகரில் உள்ள மகாவீர் கார்டன் பிரதான தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர், மணிப்பூர் மாநிலத்தில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 6:30 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் பின்புறம் உள்ள சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்தது. அப்போது, பின்பக்க வாயில் கதவை அந்த மர்ம கும்பல் தட்டி உள்ளது. அப்போது, வீட்டில் வேலை பார்த்து கொண்டிருப்பவர்கள் தான் கதவை தட்டுகிறார்கள் என்று எண்ணி விஜயகுமாரின் மனைவி வசந்தா கதவை திறந்துள்ளார். உடனே, அந்த மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை மிரட்டியதுடன் அவரை மடக்கி பிடித்து கையிரால் கை மற்றும் கால்களை கட்டி போட்டது. பின்னர் வீட்டினுள் சென்ற மர்ம கும்பல் அங்கு இருந்த வசந்தாவின் இரு மகள்கள் உட்பட 4 பேரை கையிரால் கட்டி போட்டது.
4 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
இதைத் தொடர்ந்து, அவர்களிடம் பயங்கர ஆயுதங்களை காண்பித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் மற்றும் நகைகளை தருமாறு அந்தக் கும்பல் கேட்டுள்ளது. இதனால், பயந்து போன, வசந்தா உள்ளிட்ட 4 பேரும் பீரோவின் சாவியை எடுத்து கொடுத்துள்ளனர். பின்னர், அந்த மர்ம கும்பல் வீட்டின் பெட் ரூமில் இருந்த பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி சென்றது.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!
விரல் ரேகை நிபுணர்கள் தடயம் சேகரிப்பு
இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு புழல் காவல் நிலையத்துக்கு வசந்தா தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், புலன் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார், மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று பின்னர் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணை
இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர். இதில், தொழிலதிபரின் வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததும், இந்த வீடு குறித்து நன் தெரிந்த 6 பேர் கொண்ட கும்பல் திட்ட மிட்டே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். விடியற்காலையில் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து 4 பேரை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்…மாமனாருக்கு தீ வைத்த மருமகள்..பண்ருட்டியில் அரங்கேறிய கொடூரம்!