Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக துணிநூல் துறைக்கு ரூ.912.97 கோடி முதலீடு: 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

Textile Conference: புதிய ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, போட்டித்திறன், தொழில் தொடங்கும் எளிமை, நிலைத்தன்மை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றில் அரசின் கவனத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் துணிநூல் துறை முக்கிய தூணாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தமிழக துணிநூல் துறைக்கு ரூ.912.97 கோடி முதலீடு: 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jan 2026 08:25 AM IST

கோவை, ஜனவரி 30, 2026:  தமிழகத்தின் துணிநூல் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக, 55 துணிநூல் நிறுவனங்கள் ரூ. 912.97 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை உறுதி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 13,080 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற International Textile Summit–360 மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மாநாட்டில் உரையாற்றிய துணை முதலமைச்சர், இந்தியாவின் துணிநூல் துறையில் தமிழகத்தின் பங்களிப்பு மிகப் பெரிதும் தொடர்ச்சியானதுமாக உள்ளது என தெரிவித்தார்.

நாட்டின் துணிநூல் உற்பத்தியில் தமிழ்நாடு பங்களிப்பு:

“இந்தியாவின் மொத்த துணிநூல் வணிகத்தில் 33 சதவீதம், நூல் உற்பத்தி திறனில் 46 சதவீதம் மற்றும் பருத்தி துணி அச்சிடும் திறனில் 70 சதவீதம் தமிழகத்திற்கே உரியது. மேலும், துணிநூல் துறை மூலமாக 30 லட்சம் பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. இது இந்தியாவின் மொத்த துணிநூல் வேலைவாய்ப்புகளில் 25 சதவீதமாகும். குறிப்பிடத்தக்க வகையில், நாட்டில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழகத்திலேயே பணியாற்றுகின்றனர்,” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “தேர்தல் நெருங்குவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டது”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு கருத்து

திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் வழங்கப்பட்ட ஆதரவுகளின் மூலம், உலகளாவிய துணிநூல் சந்தையில் தமிழகமானது வெறும் போட்டியாளராக மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக புதிய தரநிலைகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மானியத் திட்டத்தின் கீழ் சலுகைகள்:

துணிநூல் துறைக்கு மாநில அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்த அவர், சுழல் ஆலைகளில் பயன்படுத்தப்படும் முன்-சுழல் (pre-spinning) மற்றும் பின்-சுழல் (post-spinning) இயந்திரங்களுக்கும் 6 சதவீத வட்டி மானியத் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கும் வகையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். “இந்த திருத்தத்தின் மூலம், அந்தத் திட்டத்தின் கீழ் மூன்று முறை வரை விண்ணப்பிக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மற்றும் சென்னை போன்ற முக்கிய துணிநூல் மையங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மையங்களாக வளர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களும் சுழல், நெசவு, செயலாக்கம், ஆடை தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகிய துறைகளில் முக்கிய வளர்ச்சி பாதைகளாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார். இத்தகைய துணிநூல் மையங்கள் தரம் மற்றும் புதுமைகளில் புதிய அளவுகோல்களை அமைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:

புதிய ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026 அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, போட்டித்திறன், தொழில் தொடங்கும் எளிமை, நிலைத்தன்மை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றில் அரசின் கவனத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் துணிநூல் துறை முக்கிய தூணாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

“மதிப்புக் சங்கிலியில் மேலே செல்லுதல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உலகளாவிய சந்தைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், எங்கள் தொழில்கள் விரைவில் இந்த வளர்ச்சியை முன்னெடுக்கும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வணிக மாடல்கள், ஸ்மார்ட் தானியக்கம், ரோபோட்டிக்ஸ் மற்றும் அடுத்த தலைமுறை இயந்திரங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, தமிழகத்தின் துணிநூல் துறை நம்பிக்கையுடனும் உலகத் தரநிலைகளுடனும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறது,” என அவர் தெரிவித்தார்.

இரு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், கொள்கை நிர்ணயர்கள், புதுமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் பங்கேற்று, துணிநூல் மற்றும் கைநெசவு சூழலமைப்பில் மூலோபாய கூட்டாண்மைகள், தொழில்நுட்ப இணைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடினர்.