மிரண்ட சென்னை விமான நிலையம்.. ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வந்த பெண்!
Cocaine Seized at Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்திய நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் தோஹாவில் இருந்து வந்த அவரது உடமைகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, ஆகஸ்ட் 26: சென்னை விமான நிலையத்தில் பெண் ஒருவர் ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்தியப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கிருந்து உள்ளூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை விமான நிலையத்தில் சோதனைகள் மிகக் கடுமையாக இருக்கும். பயணம் செய்யக் கூடியவர்களும் சரி, விமானத்தில் சென்னைக்கு வருகை தருபவர்களும் சரி பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
கிடைத்த ரகசிய தகவல்
இதில் சில நேரம் பயணிகள் ஏதேனும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். இப்படியான நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து போதை பொருள் வருவதாக தெரிவிக்கப்பட்டதால் அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர்.




இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து பயணிகள் விமானமான கத்தார் ஏர்லைன்ஸ் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த நைஜீரியா நாட்டுப் பெண்ணை நிறுத்தினர்.
30 வயதான அந்தப் பெண் எதற்காக சென்னை வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்வி விஷயம் தொடர்பாக வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடைமைகளை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போது அவரது உடைமையில் இருந்த ரகசிய அறை இருப்பதையும், அதில் கருப்பு நிற பார்சல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள்
அதனை சோதனை செய்தபோது அது போதை பொருள் என்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அது கொக்கைன் போதைப் பொருள் என தெரிய வந்தது. கிட்டத்தட்ட 2 கிலோ போதைப் பொருளை அந்தப் பெண் பயணியிடமிருந்து அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 20 கோடி இருக்கும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. விமான அவசர கதவு பட்டனை அழுத்திய மாணவன் கைது!
இதனை தொடர்ந்து நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து இந்த போதைப் பொருளை எதற்காக சென்னைக்கு கொண்டு வந்தார்?, இவருக்கும் சென்னையில் ஏதாவது கும்பலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?, சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் இந்த பெண்ணும் உண்டா? என்கிற ரீதியில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அந்த நைஜீரியா பெண் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்கவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.