மீண்டும் ரூ.10க்கு பாட்டில் குடிநீர் திட்டம்.. தமிழக அரசு முடிவால் மக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசு, பேருந்து நிலையங்களில் குறைந்த விலையில் குடிநீர் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. 2011-ல் தொடங்கப்பட்ட "அம்மா குடிநீர் திட்டம்" பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 2021 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது SETC பேருந்துகளில் முதலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு, செப்டம்பர் 24: பேருந்து நிலையங்களில் குறைந்த விலைக்கு குடிநீர் விற்கும் திட்டத்தை மீண்டும் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ள தகவல் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பொது போக்குவரத்தில் அரசு பேருந்துகளின் பங்களிப்பு என்பது மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் உள்ளது. கிராமங்கள் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்த போது கொண்டுவரப்பட்ட மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக அம்மா குடிநீர் திட்டம் திகழ்ந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களில் ரூபாய் 10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டது.
பயணிகளிடையே மகத்தான வரவேற்பை பெற்ற இந்தத் திட்டத்தால் லாபம் பல மடங்கு கிடைத்தது. தனியார் நிறுவன குடிநீர் பாட்டிலின் விலை அதிகமாக இருந்ததாலும், பேருந்து நிலையங்கள் அதனை சுற்றியுள்ள கடைகளில் இருக்கும் குடிநீர் சுகாதாரமற்ற இருந்ததாலும் பொதுமக்கள் எங்கு சென்றாலும் அம்மா குடிநீர் வாங்கி பருகும் நிலைக்கு மாறினார்.
Also Read: தண்ணீர் பாட்டில் மூடியின் நிறங்களில் இவ்வளவு ரகசியமா? இவற்றின் அர்த்தம் என்ன?




இப்படியான இந்தத் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வந்த நீர் ஆலை செயலிழந்தது தான் காரணம் என சொல்லப்பட்டது. இந்த அம்மா குடிநீர் திட்டத்திற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் தற்போது திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தான். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் பதவி வகித்த போது இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றி பெற்றது
மீண்டும் கொண்டுவரப்படும் திட்டம்
இப்படியான நிலையில் மீண்டும் பேருந்து நிலையங்களில் பாட்டில் குடிநீர் விற்பனையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான விநியோக டென்டரை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதலில் எஸ்இடிசி எனப்படும் மாநில விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பின்பு தேவைக்கேற்ப பிற அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு விரிவு படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்இடிசி சேவை மூலம் தினசரி 1080 க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது சரியான சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என புகார் வந்த வண்ணம் உள்ளது.
Also Read: அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகும் வாட்டர் பெல் திட்டம்.. இதன் அவசியமும் முக்கியத்துவமும் என்ன?
இந்த திட்டம் 2026 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்த திட்டம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என பலரும் தெரிவித்துள்ளனர்.