வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் இருந்து பணியாற்ற வேண்டும் – எம்பிகளுக்கு முதல்வர் உத்தரவு
CM Stalin’s Instruction: திமுக எம்பிகள் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்பிக்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23, 2025 அன்று திமுக (DMK) எம்.பி.கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஊட்டத்தில் பேசிய முல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் 4 நாட்கள் எம்பிக்கள் தொகுதியில் இருந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
எம்பிக்களின் கடமை
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல முகாம்கள் போன்று நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்களில் திமுக எம்பிக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பயனாளிகள் அனைவரையும் இந்த பொதுக்கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டத்தில் சேர்க்க வேண்டும். தகுதியான பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைப்பது எம்பிக்களின் கடமையாகும்.
இதையும் படிக்க : ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?




4 நாட்கள் தொகுதியில் பணியாற்ற வேண்டும்
மேலும் பேசிய அவர், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கவனமாகக் கேட்டு, மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் செய்த பணிகள் மற்றும் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு நலனுக்காக பேசியது ஆகிய விவரங்களை எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் 40 இடங்களையும் வெற்றி பெற்றது. இது எம்எல்ஏக்கள் காட்டிய கடின உழைப்பின் பலன் எனவும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதே போல் எம்பிக்களும் உழைத்து, அவர்கள் வெற்றி பெற உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : டிடிவி தினகரன் – அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?
மேலும், திமுக அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் இணைந்து ஒரே அணியாகச் செயல்பட்டு திமுகவுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் எனவும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.