+2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்ததால் +2 மாணவி ஒருவர் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் முனிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சித்துள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்
ராமநாதபுரம், நவம்பர் 19: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாணவி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை கண்ணீருடன் சூழ்ந்துள்ளனர். கொலை செய்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இக்கொலை சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also read: “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
12ம் வகுப்பு மாணவியை வாலிபர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? என்று கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம் என்று சாடியுள்ளார்.
திமுக ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?’ என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே. இது உங்களை உறுத்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்:
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பஸ் ஸ்டாப்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சாடியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், படுகொலை செய்த முனிராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Also read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்:
12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காதலை நிராகரித்ததற்காக, கொடூரமாக கத்தியால் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் மனிதநேயமற்ற சம்பவமாகும். பெண்களும், சிறுமிகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இத்தகைய வன்முறைகள் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அச்சத்தையும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பெரும் கேள்வியையும் எழுப்புகின்றன.
இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், மனவலிமையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகத்தை பாதுகாப்பாக மாற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.