எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..
ADMK BJP: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை பெரிதளவில் அதிகரித்து, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 23, 2025: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக, அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது, மீண்டும் கூட்டணி அமைக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் பகவத் கீதையை அடைக்க முடியாது – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
அதிமுக தரப்பில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிட விரும்பக்கூடியவர்கள் விருப்ப மனுக்களை பெற்று சமர்ப்பித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, தேர்தலுக்கான யுக்திகள் என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கு ஆயத்தமாகும் பாஜக:
மேலும், பாஜக தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், டிசம்பர் 23, 2025 தேதியான இன்று பாஜகவின் மையக்குழு கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் 50 இடங்கள் கேட்கும் பாஜக:
பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை பெரிதளவில் அதிகரித்து, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..
எடப்பாடி பழனிசாமியுடனான இந்த சந்திப்பின் போது, தொகுதி பங்கீடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பில் இத்தனை இடங்கள் பாஜகவிற்கு ஒதுக்கப்படுமா என்பது தற்போது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.