விஜய்யின் பரப்புரைக்கு தடை விதிங்க – காயமடைந்த நபர் நீதிமன்றத்தில் மனு – அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்
TVK Vijay Campaign Stampede Karur : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழதத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது 40 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் எதிர்பாராத விதமாக இடிபாடுகளில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியுரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். விஜய்யின் அடுத்த வாரம் பிரச்சாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஜய்யின் பரப்புரைக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது ஏற்ற கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் விஜய்யின் பரப்புரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இனி விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு செப்டம்பர் 28 அன்று மாலை விசாரணைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிக்க : இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..




விஜய் ரூ.20 லட்சம் இழப்பீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார். அதே போல விபத்தின் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் அறிவித்திருக்கிறார். தமிழக அரசு சார்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கு பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கரூருக்கு விஜய் மாலை 7 மணிக்கு தான் விஜய் அங்கு வந்திருக்கிறார். அன்று காலையில் இருந்து விஜய்யை காண அப்பகுதியில் இருந்து ரசிகர்கள் சாப்பாடு இல்லாமல் காத்திருந்திருக்கின்றனர். மேலும் மாலை நேரம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் அப்பகுதியில் சூழந்திருக்கின்றனர். இது தான் விபத்துக்கு காரணம் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தாங்கள் கேட்ட இடத்தை காவல்துறை வழங்கவில்லை எனவும் காவல்துறை வழங்கிய இடம் குறுகலாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் தவெக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.