TVK Vijay Rally Stampede: விஜயின் கரூர் பிரச்சாரம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சோகம்..
TVK Vijay Campaign Stampede: தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாமக்கல்லில் 15 பேர் மயக்கம் அடைந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கரூர், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். காலை முதல் காத்திருந்த நிலையில், பலரும் வெயிலின் தாக்கத்தை தாங்காமல் மயக்கம் அடைந்தனர். அதேபோல், தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவர், மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் தொடங்க வேண்டிய நிலையில், தாமதம் காரணமாக பிற்பகல் 2.30 மணியளவில் தான் நாமக்கல்லில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். பல மணி நேரமாக வெயிலையும் பொருட்படுத்தாமல் தண்ணீரின்றி, உணவின்றி விஜயை பார்க்க காத்திருந்ததால், சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
31 பேர் உயிரிழந்த சோகம்:
அதனைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் விஜய் கரூர் மாவட்டத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். கரூரில் லட்சக்கணக்கான மக்கள் காலை முதல் குடிநீரின்றி, உணவின்றி விஜயை பார்க்க காத்திருந்தனர். காற்றோட்டம் இல்லாததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் திணறினர். விஜய் உரையை முடித்த பின் மக்கள் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் பலரும் சிக்கி உயிரிழந்தனர்.
தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 45 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது: “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய மருந்துகள் கையிலுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் நாளை நேரில் வந்து மக்களை சந்திக்க உள்ளார்” என தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.