Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..

Vijay's Rally Stampede: கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதயம் நொறுங்கிப் போயிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Sep 2025 00:19 AM IST

கரூர், செப்டம்பர் 28, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது X வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர், “இதயம் நொறுங்கிப் போயிருக்கிறது. தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சி தாமதமாகி பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. அங்கு திரளான தொண்டர்கள் கூடியிருந்ததால், வெயிலின் தாக்கத்தால் சுமார் 15 பேர் மயங்கினர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

கரூரில் கூட்டநெரிசல் – 36 பேர் பலி:

பின்னர் பல மணி நேர பயணத்திற்குப் பிறகு கரூரில் பிரச்சாரம் நடைபெற்றது. கரூரில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீரின்றி, உணவின்றி நீண்ட நேரம் காத்திருந்தனர். விஜய் உரை முடித்து புறப்பட்டபின், மக்கள் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 36 பேர் உயிரிழந்தனர். அதில் 8 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் அடங்குவர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எடப்பாடி பழனிசாமி, சீமான், அன்புமணி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நிவாரண உதவி மற்றும் விசாரணை:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நள்ளிரவு நேரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக கரூருக்கு சென்று குடும்பங்களை சந்தித்து ஆறுதல் அளித்தார். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூரில் நடந்த துயரமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது.. பிரதமர் மோடி இரங்கல்..

விஜயின் இரங்கல் பதிவு:


இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் “இதயம் நொறுங்கிப் போயிருக்கிறது. தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.