குடிநீர் புழுக்கள்.. 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – நாமக்கலில் பரபரப்பு
Namakkal Food Poisoning: நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டடுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
நாமக்கல் அக்டோபர் 29: நாமக்கல் (Namakkal) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு தினமும் கல்லூரி உணவகத்தில் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 28, 2025 அன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிலர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 4 பேர்
பின்னர் மாணவர்கள் நாமக்கலில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் மாணவர்களின் பெற்றோர் கல்லூரியை முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : 16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்… 3 மாத கர்ப்பம்… போக்சோவில் கைது
குடிநீரில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி
இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து உடனடியாக கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்கள் கல்லூரி உணவக சமையலறையை ஆய்வு செய்தபோது, அது மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், மாணவர்களுக்கு குடிநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட தொட்டி முழுவதும் அழுக்காகவும், புழுக்கள் நிறைந்தும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் சாப்பிட்ட உணவு மற்றும் குடிநீர் மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கல்லூரிக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க : சென்னையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு சம்பவம் – என்ன நடந்தது?
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக சமையல் கலைஞர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர்கல்வி நிறுவனம் இப்படியான அசுத்தமான சூழலில் உணவு வழங்குவது கவலையை ஏற்படுத்தியிருப்பதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.