ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. புதிய கட்சி தொடக்கம்? பாஜக தலைவர்களை சந்திக்கவும் திட்டம்!!
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு" அமைத்து செயல்பட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், அக்குழுவை கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதற்காக அவர் டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை, டிசம்பர் 03: பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கடந்த நவ.24 ஆம் தேதி சென்னையில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. அதில், அதிமுக ஒருங்கிணைய எடப்பாடி பழனிசாமிக்கு டிச.15ம் தேதி வரை கெடு விதித்திருந்தார். அதோடு, டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, அவர் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ்-ன் முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
டிச.15ல் முக்கிய முடிவு:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” அமைத்து செயல்பட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், கடந்த நவம்பர் 24ம் தேதியன்று சென்னை வேப்பேரியில் அக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைவதற்கு இன்னும் ஒரு மாத அவகாசம் கெடு விதிப்பதாக தெரிவித்தார். அதோடு, அதிமுக ஒருங்கிணைப்பில் முன்னேற்றம் இல்லாவிட்டால், டிச.15ல் மீண்டும் கூட்டம் கூட்டி முக்கிய தீர்மானம் எடுப்போம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
அதிமுக தொடர் தோல்வி குறித்து விமர்சனம்:
அதோடு, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகக் கூறியிருந்தார். இந்த தொடர் தோல்விகள் மற்றும் சர்ச்சைக்குரிய பொதுக்குழு தீர்மானங்களால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால், முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி:
இதே கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் மூன்றரை ஆண்டுகளாக அமைதியான போராட்டம் நடத்தி வருகிறார். அடுத்த ஒரு மாதத்தில் அதிமுக ஒன்றிணையாவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் குழு புதிய கழகமாக உருவெடுக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், அதிமுக அடிப்படை தொண்டர்கள் தங்களுக்குப் பின்னணியாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தடையாக இருக்கும் சக்திகளை அகற்றுவதே இலக்கு என்றும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்:
இந்நிலையில், நேற்றைய தினம் ஓ. பன்னீர்செல்வம் கோயம்பத்தூரில் இருந்து கொச்சி புறப்பட்டு அங்கிருந்து டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பயணத்தையொட்டி, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிய கட்சியை பதிவு செய்வது பற்றிய ஆலோசனைகள் டெல்லியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். குறிப்பாக, இந்த திடீர் பயணம் பாஜகவின் நேரடி அழைப்பின் பேரில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



