எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு…செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி!
Tvk Sengottaiyan: மேட்டுப்பாளையம் அருகே முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம். ஜி. ஆர் சிலைகளுக்கு கே. ஏ. செங்கோட்டையன் மாலை அணிவிப்பதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துடன், சிலைகளை பூட்டு போட்டு பூட்டினர். இதனால், இரு இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே. ஏ. செங்கோட்டையன் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கே. ஏ. செங்கோட்டையன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கார் மூலம் ஆலாங்கொம்பு வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வருகை தந்தார். ஆலாங்கொம்பில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள எம். ஜி. ஆர். சிலைக்கு செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர் மாலை அணிவிக்க சென்றனர். இதை அறிந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு
அப்போது, இந்த எம். ஜி. ஆர். சிலை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது என்று கூறி, சிலையை சுற்றியுள்ள கதவுக்கு பூட்டு போட்டனர். இதனால், எம். ஜி. ஆர். சிலைக்கு செங்கோட்டையினால் மாலை அணிவிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார்.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. இதுதான் வியூகம்?
அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்க எதிர்ப்பு
அங்கு, அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினருடன் ஊர்வலமாக சென்றார். ஆனால், அங்கும் அண்ணா சிலைக்கு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால், செங்கோட்டையனால் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. பின்னர், அண்ணா சிலை முன்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வனபத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம்
இதைத் தொடர்ந்து, த. வெ. க. மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் அங்கிருந்து தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு, அம்மனை தரிசனம் செய்துவிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அன்னதானத்தை செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தவெகவின் புதிய அலுவலகம் திறப்பு
பின்னர், மேட்டுப்பாளையத்தில் எல். எஸ். புரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே. ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார். இவருக்கு இரு இடங்களில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்கும் செயலி…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்!