“பழைய ஓய்வூதிய திட்டம்”…முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பு!
Old Pension Scheme: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை (ஜனவரி 3) முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஜனவரி 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருடன் பொதுப் பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில், ஆசிரியர் உள்ளிட்டோருக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பான ஆலோசனை குழுவை நியமிக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போட்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை சனிக்கிழமை ( ஜனவரி 3) முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தனர். இந்த அறிவிப்பில், பழைய ஓய்வூதியம் தொடர்பாக மிக முக்கியமான தகவல் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: ஜன.5ல் 2,000 பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’.. அமித் ஷா பங்கேற்கிறார்..




பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து
கடந்த 2004- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2024- ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இது பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போல பல்வேறு பலன்களை வழங்குகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி தொடர் போராட்டம்
இருந்தாலும், முன்பு இருந்ததைப் போல பழைய ஓய்வூதிய திட்டமே வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். இதில், பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார் என்ற தகவல் கவனம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..