Online Gambling: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!
Tamil Nadu Online Gambling Addiction: கும்பகோணத்தில் ஐடி ஊழியர் சுரேஷ்குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50,000 இழந்து தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் கடுமையான சட்டங்கள் இருந்தும், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

கும்பகோணம், ஆகஸ்ட் 11: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் (Online Gambling) தமிழ்நாடு அரசு (Tamil Nadu Govt) பல கடுமையான சட்டங்களை இயற்றினாலும், தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகளவில் பணத்தை இழந்து உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வெளியிடப்படும் விளம்பரங்கள், பயன்படுத்தும் முறை என ஆன்லைன் சூதாட்ட முறைகளில் பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்படுகிறது. இதையறித்து பலரும் அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, கடன் வாங்கி அதிக பணத்தை முதலீடு செய்கின்றனர். இதனால், அதிகளாவிலான பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் தற்போது கும்பகோணம் அருகே நடந்துள்ளது. இதையறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: குளிர்சாதன மின்சார பேருந்துகள்.. 11 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு..
என்ன நடந்தது..?
கும்பகோணம் அருகே ஐடி ஊழியர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் இழந்த நிலையில், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்த கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசமர தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 22 வயதில் சுரேஷ்குமார் என்ற மகன் உள்ளார். சுரேஷ்குமார் ஒரு பிஎஸ்சி பட்டதாரி என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.




தற்போது வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார். சுரேஷ்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் மூலமாக கேம் விளையாடி வந்துள்ளார். இதில், ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் முழு வீச்சில் இறங்கியதாக கூறப்படுகிறது.
ALSO READ: திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் சுரேஷ் குமார் ரூ.50 ஆயிரத்தை முதலீடு செய்து இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிகளவில் பணம் இழந்தததை உணர்ந்த சுரேஷ்குமார் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 9ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)