சட்டமன்ற தேர்தலில் திராவிடருக்கும்-தமிழருக்கும் இடையே போட்டி…சீமான்!
Ntk Chief Coordinator Seeman : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழருக்கும், திராவிடர்களுக்கும் போட்டி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார் .

திராவிடருக்கும் தமிழருக்கும் போட்டி
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிடர்களுக்கும் போட்டி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இது தொடர்பாக, சென்ன வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்ற பின்னர், சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் கூட்டமாக நிற்பதற்கு தைரியம் தேவை இல்லை. தனியாக களம் காண்பதற்கு மட்டுமே தைரியம் தேவை. மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் இலவச மடிக்கணினிகளை வழங்காமல் கல்லூரி படிப்பை முடிக்கும் நேரத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது தேர்தல் உள்நோக்கமாகவே உள்ளது. இதேபோல, பொங்கல் பண்டிகைக்கும் ரூ. 3000 தேர்தலுக்காகவே வழங்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் அரசு சிறப்பாக செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது அவரது சொந்த கருத்தாகும். இதில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பொங்கல் பரிசுக்காக ரூ.6,800 கோடி
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4.5 ஆண்டுகளில் 4.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு ரொக்கம் வழங்குவதற்காக ரூ. 6,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் மழை நீர் வடிந்து செல்வதற்கு முறையான வசதி செய்யப்படாமலும், குடிநீரோடு, கழிவு நீர் கலந்து செல்லும் நிலை உள்ளது. மழை வெள்ளத்தை தேங்க வைத்து திமுக அரசு நிவாரணம் அளித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பண பலத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கமும், மக்கள் பலம் உள்ளவர்கள் இன்னொரு பக்கமும் போட்டியிடுகின்றனர். நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண்கிறோம்.
மேலும் படிக்க: கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் 2- ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணை…பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி!
நாதக வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும்
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். ஜனநாயகம் படத்தை போல எனது படங்கள் உட்பட பல்வேறு படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தவிர முக்கிய பிரச்சினைகள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. அந்த பிரச்சனைகளை அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் பேசுவதில்லை. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது குறித்து மத்திய அரசை முதல்வர் மு. க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திராவிடருக்கும், தமிழருக்கும் போட்டி
வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடருக்கும், தமிழருக்கும் போட்டியாக இருக்கும். இந்த தேர்தலில் திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதை எங்கள் முதல் வேலை. சட்டமன்ற தேர்தலில் அதனை நிச்சயம் செய்து காட்டுவோம். இந்த பொங்கல் மக்கள் பொங்கலாக இல்லாமல் அரசியல் பொங்கலாக மாறி உள்ளது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் மக்கள் ஆட்சியாகும். ஆனால், திமுக அரசு அதனை விடுத்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்…தமிழக அரசு அரசாணை வெளியீடு!