கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் 2- ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணை…பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி!
Karur Stampede Incident Investigation: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 2- ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டனர். இதில், விஜய்யின் பிரசார பேருந்தை கரூருக்கு கொண்டு வந்து அதன் ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பிரச்சார பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி இரு வயது குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது, இன்று சனிக்கிழமை ( ஜனவரி 10 ) 2- ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்த விஜயின் பிரச்சார பேருந்து சென்னையிலிருந்து, கரூருக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் விசாரணை
அப்போது, சம்பவ இடத்தில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டு, அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ஆகியோரிடம் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் பேருந்தில் ஏறி சோதனை செய்தனர். மேலும், பேருந்து ஓட்டுனரிடம் பேருந்து முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்குமாறு அதிகாரிகள் கூறினர். அதன்படி, அந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்கி காண்பித்தார்.
மேலும் படிக்க: சென்னையில் இனி மரங்களை வெட்டினால் அவ்ளோதான்…மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்!




பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுனரிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வரும் திங்கள்கிழமை ( ஜனவரி 12) டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விசாரணைக்காக ஆஜராக உள்ளார். இந்த நிலையில், அவர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிபிஐ விசாரணைக்குள் கொண்டு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ விசாரணையில் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கு
கரூரில் கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி நடைபெற்ற இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருந்தது. இதே போல, சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருந்தது. இந்த இரு விசாரணை குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், இந்த விசாரணையானது சிபிஐ வசம் சென்றது. தற்போது, இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: லேப்டாப்பில் கருணாநிதி-ஸ்டாலின் படம் நீக்கம்….மாணவர்களே கவனம்…எல்காட் நிறுவனம் எச்சரிக்கை!