AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டிலேயே பிரசவம்.. தாய் – சேய் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழப்பு.. பதறவைக்கும் சம்பவம்!

அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே பழனியம்மாள் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னகிருஷ்ணன் கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

வீட்டிலேயே பிரசவம்..  தாய் – சேய் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழப்பு.. பதறவைக்கும் சம்பவம்!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Apr 2026 11:37 AM IST

தருமபுரி, ஏப்ரல் 19: மலையடிவார கிராமத்தில் வீட்டில் பிரசவம் நடந்த நிலையில் தாயும், சேயும் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும், இன்றைய நவீன உலகில் பாதுகாப்பான பிரசவத்திற்கு மருத்துவமனைச் சூழலே சிறந்தது என்ற கருத்து வலுவாக உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் வீடுகளில் பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வது ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகும்.

இதையும் படிங்க: 5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!

வீட்டில் பிரசவம் பார்த்ததால் சிக்கல்:

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி அருகே மலையடிவாரத்தில் காரப்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சென்னகிருஷ்ணன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (38). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆண் வாரிசு வேண்டும் என்று சென்னகிருஷ்ணன், பழனியம்மாள் தம்பதி ஆசைப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பழனியம்மாள் 4வது முறையாக கர்ப்பம் தரித்தார்.

போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமம்:

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பழனியம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மலையடிவார கிராமம் என்பதால் போதிய போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்து உள்ளனர். அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

தாய்-சேய் பரிதாப சாவு:

ஆனால், பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே பழனியம்மாள் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னகிருஷ்ணன் கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரசு மருத்துவர், செவிலியர் ஆகியோர் சென்னகிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு பழனியம்மாளை பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் – நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

போலீசார் தீவிர விசாரணை:

பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தையும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிட்லிங் கிராம நிர்வாக அலுவலர் கதிரவன் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பழனியம்மாள் மற்றும் பிறந்த பெண் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் தாய்-சேய் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow Us