ரூ.1908 கோடி முறைகேடு…வெளிநாட்டில் முதலீடு செய்ய அமைச்சர் தரப்பு பேச்சு? அமலாக்கத்துறை தகவல்!
Minister Side Talks To Invest In Italy: இத்தாலியில் முதலீடு செய்வது தொடர்பாக நகராட்சி துறை அமைச்சர் கே. என். நேரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமுக மூத்த நிர்வாகியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சருமான கே. என். நேரு மீது அவரது துறையில் பணி நியமனம் செய்ததில் ரூ. 888 கோடி மற்றும் டெண்டர் விவகாரத்தில் ரூ. 1020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தற்போது வரை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இத்தாலியில் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை
இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், அண்மையில் நகராட்சி துறை அமைச்சர் கே. என், நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்றுள்ளார். அங்கு, பல கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பாக சிலரை சந்தித்து பேசி உள்ளார். இதில், அமைச்சர் கே. என். நேருவின் துறையில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுத்து தருவதாகவும், 4 நிறுவனங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஈரோடு செல்லும் விஜய்…தேதி…நேரம்…குறித்த செங்கோட்டையன்!




அமைச்சரின் சகோதரர் உள்ளிட்டோர் குறித்து விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாகவும் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்து வரும் நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், அமலாக்கத்துறை கடிதம் எழுதிய மறுநாள் கே. என் நேருவின் மகனான அருண் நேரு டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இருந்தார்.
நிதியமைச்சருடன் அமைச்சர் மகன் சந்திப்பு
இவரது இந்த திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. அதில், அருண் நேரு எம். பி. மக்களவை கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், தனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அமலாக்கத் துறையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை
ஆனால், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பிய மறுநாளே மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருண் நேரு எம் பி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!