தொகுதிகள் குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ..
இதற்கு முன்னதாக, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக உள்ளது. நிபந்தனையற்ற ஆதரவை மதிமுக எப்போதுமே திமுகவிற்கு வழங்கி வருகிறது. எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினர் திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 11, 2026: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழகத்தில் பாஜக நுழையக்கூடாது என்ற ஒற்றை எண்ணத்தில் தான் திமுக கூட்டணி இருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 95% கூட்டணி முடிவாகியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்:
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், மதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சிகளாக அழைப்பு விடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 37 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மதிமுகவுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, தொகுதிகள் விரைவில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மதிமுக அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம்:
இந்த சூழலில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் அதுகுறித்த முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் நலனே முக்கியம்:
இதற்கு முன்னதாக, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக உள்ளது. நிபந்தனையற்ற ஆதரவை மதிமுக எப்போதுமே திமுகவிற்கு வழங்கி வருகிறது. எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினர் திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…
எந்த சின்னத்தில் போட்டியிடுவது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதெல்லாம் குறித்து பேசியிருக்கிறோம். திமுகவும் தங்களின் சூழ்நிலையை எடுத்துரைத்துள்ளனர். அதைப்பற்றிதான் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த முறை கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொதுநோக்கில் செயல்படுகிறோம். மத்திய அமைச்சர் பதவியை இருமுறை வேண்டாம் என மறுத்தவர்தான் பொதுச் செயலாளர் வைகோ.
தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயார் – துரை வைகோ:
இந்த நேரத்தில் கூட்டணிக்குள் எந்தப் பிரச்சனையும் வராது. தகுந்த நேரத்தில் எந்தவித காலதாமதமும் இன்றி தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும். எங்களின் பொதுவான நோக்கம் பாஜக தமிழகத்தில் நுழையக்கூடாது என்பதே. அதற்காகத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு
இதனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் எதுவாக இருந்தாலும், மதிமுக விட்டுக் கொடுக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.