பட்டாசு வெடிப்பதில் போட்டி – இரும்பு ராடால் இளைஞர் அடித்துக்கொலை – என்ன நடந்தது?
Rivalry over crackers: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பட்டாசு வெடிப்பதில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இளைஞர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வேலு என்பவர் பார்த்திபன் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தீபாவளி (Diwali ) பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் மக்கள் பட்டாசு வெடிப்பதை நிறுத்தவில்லை. வீடுகளில் புத்தாடை உடுத்தி பலகாரங்கள் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு வழக்கத்தை விட பட்டாசு வெடிப்பது குறைந்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கத்தை விட வாகன நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே கடலூர் (Cuddalore) மாவட்டம் பண்ருட்டியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு என்ற காரமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது எதிர் வீட்டில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இருவரும் கூலித்தொழிலாளிகள். தீபாவளியான அக்டோபர் 20, 2025 அன்று வீட்டின் முன்பு இருவரும் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 10 நாள் பழக்கம்.. கோவை அரசு மருத்துவமனையில் இளைஞர் கொலை!
இந்த நிலையில் வேலு தனது வீட்டின் அருகே இருந்த இரும்பு ராடை எடுத்து பார்த்திபனை தாக்கியுள்ளார். இதில் பார்த்திபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மயங்கி விழுந்த அவரை உடனடியா மீட்டு அருகில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பார்த்திபன் அனுப்பி வைக்கப்பட்டார்.
தலைமறைவான கொலையாளி
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் உயரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வேலு மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் வேலு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க : ஆன்லைன் வர்த்தக நஷ்டம்.. 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட பார்த்திபனின் வருமானத்தை நம்பி இருந்த அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தீபாவளி என்பது ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்த கொண்டாடும் பண்டிகை. இந்த நிலையில் தீபாவளியன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெடிக்கப்படும் பட்டாசே ஒருவரின் உயிரை பறிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் செம்மேடு கிராமத்தினரே கவலையில் மூழ்கியிருக்கின்றனர்.