அப்படி போடு.. அக். 21ஆம் தேதியும் லீவு தான் மக்களே.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..
Diwali Holiday: அரசு ஊழியர்களின் கோரிக்கை மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது தீபாவளிக்கு அடுத்த நாளான 21 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அக்டோபர் 18, 2025: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதாவது வரும் திங்கட்கிழமை (20 அக்டோபர் 2025) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதனை ஒட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு செவ்வாய்க்கிழமை 21 அக்டோபர் 2025 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால் தொடர்ந்து வார இறுதி நாட்கள் மற்றும் திங்கட்கிழமை என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்:
17 அக்டோபர் 2025 தேதியான நேற்றிலிருந்தே மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லத் தொடங்கிய நிலையில், சென்னை தாம்பரம், பெருங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதேபோல் சென்னை கோயம்பேடு, மாதவரம், வானகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு தனி வாகனத்தில் ஊருக்கு போறீங்களா? காவல்துறை முக்கிய அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை:
இது ஒரு பக்கம் இருக்க, அரசு அலுவலர்கள் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் ஏற்கனவே அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு அக்டோபர் 3, 2025 அன்று சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறி இந்த கோரிக்கையை நிராகரித்தனர். ஆனால் தற்போது தீபாவளிக்கு அடுத்த நாளான 21 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரைக்கு செல்ல ரூ.5,000 – 7,000ஆ? எச்சரிக்கையை மீறி கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் – மக்கள் அதிர்ச்சி
இது தொடர்பான அறிக்கையில், “இந்த ஆண்டு 20 அக்டோபர் 2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு
21 அக்டோபர் 2025 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும்; அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25 அக்டோபர் 2025 அன்று பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.