Salem: குடும்பம் நடத்த வராத மனைவி.. கொலை செய்த கணவன்
Salem Crime News: சேலம் தாதகாப்பட்டியில் குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் கண்ணன் தனது மனைவி ரதிதேவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சமாதானப் பேச்சுவார்த்தையின்போது இக்கொலை நிகழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம், அக்டோபர் 19: சேலம் மாவட்டத்தில் இல்வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சமாதான பேச்சு வார்த்தை நிகழ்ந்த போது தனது மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள தாகூர் தேர்வை சேர்ந்தவர் கண்ணன். இவர் பழைய இரும்பு வியாபாரியாக உள்ளார். இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும் , சுபா என்ற மகளும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர், ரதிதேவி அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் துணி மடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதை கண்ணன் கண்டித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ரதிதேவியின் நடத்தை மீதும் சந்தேகம் இருந்துள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு முற்றியதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரவிதேவி அருகில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
Also Read: பாலியல் துன்புறுத்தல் ;. ஐடி ஊழியர் தற்கொலை ; வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
இதனையடுத்து பலமுறை கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தியும் ரதிதேவியுடன் சமாதானம் ஏற்படவில்லை. இப்படியான நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 17) கண்ணன் மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவி ரதிதேவியுடன் தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். கணவனின் அழைப்பை நம்பி ரவிதேவி இந்த முறை பிரச்சனை சரியாகும் என அவருடன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.அப்போது அங்கு பேச்சுவார்த்தையின் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கடும் கோபமடைந்த கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக குத்தினான். இதனை சற்றும் எதிர்பாராத ரதிதேவி வலியால் அலறி துடித்தார். உடனடியாக சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டிற்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ரதிதேவி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மனைவியை குத்திக் கொன்ற கண்ணன் மாடி வீட்டில் இருந்து இறங்கி தப்பியோட முயன்ற நிலையில் அந்த நேரத்தில் அவரது இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் இருந்துள்ளது.
இதனால் பயந்து போன அவர் அதனை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவிதேவியின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சீலநாயக்கன்பட்டியில் இருந்த கண்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து கண்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் மனைவியை கொன்றதற்கான காரணத்தை தெரிவித்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மனைவி மீது கண்ணனுக்கு மிகப்பெரிய அளவில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. தன் மனைவி யாரிடம் பேசினாலும் அவர் சந்தேக பார்வையுடன் பார்த்து வந்துள்ளார். இதனிடையே கண்ணனின் தொல்லை தாங்க முடியாத ரதிதேவி அவரிடம் சண்டை போட்டு விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வீட்டிற்கு அழைத்து சென்று ரதிதேவியின் காலில் கண்ணன் விழுந்து அழுதுள்ளார். ஆனால் நீ இப்படித்தான் நடிப்பாய், இனியும் உன்னுடன் சேர்ந்து வாழவே மாட்டேன் என ரவிதேவி கூறியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியை குத்திக் கொன்றதாக கண்ணன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.