திராவிட வெற்றிக் கழகம்… புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா – கட்சியின் பெயரால் சர்ச்சை!
DVK Party Announced : மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20, 2025 அன்று திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ள நிலையில், தற்போது பெயர் சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை, நவம்பர் 20: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா (Mallai Sathya), தனது புதிய அரசியல் கட்சியை நவம்பர் 20, 2025 இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு திராவிட வெற்றிக் கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற களத்தில் இருப்பதால், அதே போன்று புதிய கட்சியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, வைகோ (Vaiko) மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த நிலையில் தான் அவர் தனிக் கட்சி தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக துரை வைகோவுடன் மல்லை சத்யாவிற்கு கடுமையான வாக்குவாதம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் வைகோ மற்றும் துரை வைகோ மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவற்றின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 2025 மாதத்தில் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதையும் படிக்க : கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!




இது தொடர்பாக அவர் விளக்கம் கேட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். அதன் படி சென்னை அடையாறில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் மல்லை சத்யா புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் உட்பட பல மதிமுக முன்னாள் நிர்வாகிகள் இருந்தனர். தனது கட்சியின் பெயரை திராவிட வெற்றிக் கழகம் என அறிவித்தார்.
தொடரும் கட்சிகளின் பெயர் சர்ச்சை
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
விஜய் கட்சி தொடங்கிய போது தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டார். ஆங்கிலத்தில் அக்கட்சியை TVK என அனைவரும் அழைக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் வேல்முருகன் தான் முதலில் கட்சி தொடங்கியதாகவும் தங்கள் கட்சி ஏற்கனவே TVK என அழைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை நினைவுபடுத்தும் விதமாக மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என கட்சித் தொடங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.