“ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்த திமுக அமைச்சர்”.. நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு!!
திமுக அமைச்சர் அனிதா கிருஷ்ணன் மீது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் ஜெயலலிதாவை ஏமாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு, திமுகவில் சேர்ந்த பின் தான் பெருமளவில் சொத்து சேர்த்ததாகவும், வரும் தேர்தலில் அவர் தோல்வி பெற வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
தூத்துக்குடி, நவம்பர் 18: தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும், ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தையிலும், மற்றொரு பக்கம் தீவிர சுற்றுப்பயணத்திலும் இருந்து வருகின்றனர். அந்தவகையில், இந்த தேர்தலுக்கு மேலும் சுவாரஸ்யம் ஏற்றும் வகையில், விஜய் அரசியல் வருகை, அதிமுக பிளவு, பாமக பிளவு என பரபரப்பு நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Also read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
அந்தவகையில், முதல் ஆளாக அதிமுகவும், பாஜகவும் தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன. தொடர்ந்து, பாஜகவில் அண்ணாமலை தலைமை இருந்தவரை அதிமுக கூட்டணி இறுதியாகமல் இருந்தது. நயினார் நாகேந்திரன் தலைமை ஏற்றதுமே இக்கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அந்தவகையில், நயினார் நாகேந்திரனும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.




அவ்வாறு, கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். வரும் தேர்தலில் அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரூ.500 கோடிக்கு சொத்து:
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 2001-ஆம் ஆண்டில் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருப்பது மக்கள் பணத்தில் தான் என்றும், இது குறித்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுகவில் சேர்ந்த பின்னரே செல்வம்:
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி விட்டு அவர் திமுகவில் சேர்ந்ததாகவும் சாடியுள்ளார். அதோடு, திமுகவில் சேர்ந்த பின்னரே அவர் பெருமளவு செல்வம் சேர்த்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், இதனை நினைவில் வைத்து வரவிருக்கும் தேர்தலில், அனிதா ராதாகிருஷ்ணனை மக்கள் உறுதியுடன் தோற்கடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.
Also read: “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்
வாய்திறக்காத கனிமொழி:
தொடர்ந்து பேசிய அவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்.பி.குற்றம்சாட்டியதை நினைவுகூர்ந்தார். அதன்பின் இன்று வரை அந்த விஷயம் குறித்து திமுக பேசாததற்கான காரணம் என்னவென்றால், டாஸ்மாக் மூலம் அரசு சம்பாதிக்கும் பெரும் வருமானம் எனவும் சாடினார். மதுக்கடைகளை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தும், அவற்றின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.