“விரைவில் மகளிர் உரிமைத் தொகை”… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இன்று காலை தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் முதல்வர் அலுவலகச் செயலாளர்களுடன் முதல்வர் விஜய் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
சென்னை, மே 14: தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், மே மாதத்திற்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 1.31 கோடி பயனாளிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இந்தத் தொகை விரைவில் நேரடியாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். பொதுவாக, தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஒருவேளை விடுமுறை தினமாக இருந்தால், ஒரு நாளைக்கு முன்பாகவே இந்தத் தொகை வரவு வைக்கப்படுவது வழக்கம்.
மேலும் படிக்க: “ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி”.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்வதாக மதுப்பிரியர்கள் குமுறல்!!
மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை:
அந்த வகையில் நாளை (மே 15) இந்தத் தொகை வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், முதல்வர் விஜய் இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். அதில், மகளிருக்கு மாதம்தோறும் ₹1,000 வழங்கும் இந்தத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குச் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். எனினும், மிக விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, மே மாதத்திற்கான தொகை குறிப்பிட்ட நாளை தேதியில் (மே 15) வராது எனத் தெரிகிறது.
தேர்தல் வாக்குறுதி மற்றும் நிதி நிலை ஆய்வு:
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இன்று காலை தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் முதல்வர் அலுவலகச் செயலாளர்களுடன் முதல்வர் விஜய் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பழைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி நிலைமை, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உடனடியாக விடுவிக்க வேண்டிய நிதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகே, மகளிர் உரிமைத் தொகையை விரைவில் விடுவிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர்களுக்கான நிதி விடுவிப்பு:
மகளிர் உரிமைத் தொகைக்குச் சற்று கால அவகாசம் கோரப்பட்டிருந்தாலும், கல்லூரி மாணவ-மாணவியருக்கான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ₹1,000 உதவித்தொகை இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1.31 கோடி மகளிர் பயன்பெறும் இந்தத் திட்டத்தில், தற்போதைய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் எந்தத் தடங்கலும் இன்றித் தொகை வழங்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு.. அசுர வேகத்தில் நிதியை விடுவித்த முதல்வர் விஜய்!!