“ஒத்த ரூபாய் கூட நான் கொடுக்கல.. நிரூபிச்சு காட்டுங்க!”.. மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் சவால்!!
Madurantakam By-Election: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது "வாக்காளர்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை, முடிந்தால் நிரூபியுங்கள்" என தவெக வேட்பாளர் மரகதம் காட்டமாக சவால் விடுத்துள்ளார். மேலும், இளைஞர்கள் வாக்குப்பதிவு, தேர்தல் விதிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தந்தி டிவியின் பேட்டியில் அவர் பகிர்ந்த முக்கியத் தகவல்கள் இதோ.
செங்கல்பட்டு, அக்.06: தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மரகதம் குமரவேல், வாக்குப்பதிவு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழும் குற்றச்சாட்டுகள், வாக்குப்பதிவு சதவீதம், தேர்தல் மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் ஐந்து முனை போட்டி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் மிக விரிவாக பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: நள்ளிரவில் வெளியான சர்ச்சை வீடியோ.. கொந்தளித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா.. நடந்தது என்ன?
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா?:
சிபிஎம் கட்சியின் சண்முகம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் விநியோகிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இக்குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த மரகதம், “நாங்கள் வாக்காளர்களுக்கு ஒரு ரூபா, ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை. முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள்” என நேரடியாகச் சவால் விடுத்தார். தமிழக வெற்றி கழகத்தின் முதன்மை கொள்கையே ஊழலற்ற, தூய்மையான ஆட்சியைத் தருவதுதான் என்றும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விளக்கம்:
வாக்குப்பதிவு மையங்களில் இளம் வாக்காளர்களின் வருகை மற்றும் ஆர்வம் குறைவாக இருப்பதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், “இது ஒரு இடைத்தேர்தல். மேலும், மதுராந்தகம் தொகுதியைத் தவிர மற்ற சுற்றியுள்ள மாவட்டங்களிலோ அல்லது மாநில அளவிலோ இன்று பொது விடுமுறை கிடையாது” என்று சுட்டிக்காட்டினார். சென்னை போன்ற வெளி இடங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரிகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் மற்றும் செமஸ்டர் தேர்வு எழுதுபவர்கள் காலையிலேயே புறப்பட்டுச் சென்றிருக்கலாம். அவர்கள் மாலையில் கல்லூரி அல்லது பணி முடிந்த பிறகு வந்து வாக்களிப்பார்கள் என்பதால், மாலை 4 மணி அல்லது 5 மணிக்கு மேல்தான் இளைஞர்களின் வாக்குப்பதிவு நிலவரத்தை முழுமையாகச் சொல்ல முடியும் என்றார்.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்:
கிராமப்புற வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் போதிய அளவில் இல்லை என்று எழும் புகார்கள் குறித்துப் பேசிய மரகதம், தான் பார்வையிட்ட இடங்களில் சரியான பந்தல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தலில் காவல்துறையினரும் அதிகாரிகளும் விதிகளை மிகவும் கடுமையான முறையில் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் வாக்களிக்க வரும்போது அவர்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள் சில இடங்களில் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “என் தங்கைக்கு பதில் நான்தான் ஓட்டு போடுவேன்!”.. தாராபுரம் வாக்குச்சாவடியில் பரபரப்பை கிளப்பிய மூதாட்டி!!
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்:
மதுராந்தகம் தொகுதியில் நிலவும் ஐந்து முனை போட்டி குறித்துப் பேசுகையில், “எங்கள் தவெக தலைவர் (தளபதி) கூறியது போல், தமிழக வெற்றி கழகம் முதல் இடத்தில் உறுதியாக இருக்கிறது; இரண்டாம் இடத்திற்குத் தான் திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவுகிறது” என்று நம்பிக்கையோடு கூறினார். மேலும், பதவி விலகி வேறு கட்சிக்கு மாறி இந்தத் தேர்தலைத் திணித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை. தலைமை எடுத்த முடிவு மற்றும் கொள்கை முரண்பாடுகள் காரணமாகவே தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதில் எவ்வித குதிரைப் பேரமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் யாரும் இதை விமர்சிக்கவில்லை; எதிர்க்கட்சிகள் மட்டுமே காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மீது திணிக்கின்றன என அழுத்தமாகக் கூறினார்.