Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Madurai Route Train Changes | தமிழகத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்காமாக உள்ளது. இந்த நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை வழியாக செல்லும் ரயில்களில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Aug 2025 09:27 AM

மதுரை, ஆகஸ்ட் 01 : மதுரை (Madurai) ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளான சமயநல்லூர், வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. இந்த நிலையில், மதுரை வழியாக செல்லும் ரயில்களில் என்ன என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்

ரயில் போக்குவரத்து மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது, கோயம்புத்தூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில் இன்று (ஆகஸ்ட் 01, 2025) முதல் ஆகஸ்ட் 23, 2025 அன்று வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதற்கு பதிலாக இந்த நாட்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு ரயில் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு செல்லும்.

இதையும் படிங்க : கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் ஆகஸ்ட் 03, 2025, ஆகஸ்ட் 06, 2025, ஆகஸ்ட் 10, 2025, ஆகஸ்ட் 13, 2025, ஆகஸ்ட் 17, 2025 மற்றும் ஆகஸ்ட் 20, 2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுபாதையில் செல்லும். அவ்வாறு செல்லும் இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நின்று செல்லும்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ரயில் போக்குவரத்து மாற்றம் விவரம்

கத்ராவில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாராந்திர ரயில் ஆகஸ்ட் 07, 2025 மற்றும் ஆகஸ்ட் 14, 2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும். இந்த நிலையில், கோவை – நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் ரத்து செய்யப்படும். அங்கிருந்து சில மணி நேரம் கழித்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இவ்வாறு இயக்கப்படும் அந்த சிறப்பு ரயிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.