ஆடிப்பெருக்கு, வார இறுதி நாட்கள்.. 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
Special Buses: ஆடி கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (2025, ஆகஸ்ட் 1,2 மற்றும் 3 ஆம் தேதி) சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக 1,090 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 30, 2025: தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எளிதாக செல்ல வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுமக்கள் பேருந்து சேவைகளையே விரும்புகின்றனர். ஒரு சில பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை என்றால் கூட பேருந்து சேவைகள் கட்டாயம் இருக்கும் மேலும் கடைசி நேர பயணத்திட்டத்திற்கு இந்த பேருந்து சேவைகள் பெரிதும் உதவுகிறது. தினசரி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களுக்கும் ஆயிரம் கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்:
அந்த வகையில் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி, ஆகஸ்ட் 2ஆம்தேதி மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு மற்றும் பல இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க: உறுப்பினர் சேர்க்கைகான புதிய செயலி.. இன்று நடக்கும் த.வெ.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1ம் தேதி வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், 2ம் தேதி சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1ம் தேதி 55 பேருந்துகளும் 2ம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு
மாதவரத்திலிருந்து 1ம் தேதி 20 பேருந்துகளும் 2ம் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 ஆயிரம் பயணிகள் முன்பதிவு:
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.