மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது..!
Madurai Policeman Arrested: மனைவியை வரதட்சணை கேட்டு தாக்கிய காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க பிரியா தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது கணவரின் கொடுமை விவரிக்கப்பட்ட ஆடியோவொன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது.

மதுரை ஜூலை 19: மதுரை மாவட்டத்தில் (Madurai) தங்க பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய (Cruelty due to dowry demands) தலைமைக் காவலர் பூபாலன் கைது (Head constable Boopalan arrested) செய்யப்பட்டார். அவரது மனைவி தங்க பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார். திருமணத்தின் போது வழங்கிய 60 பவுன் நகையையும் பைக்கையும் அடுத்து, மேலும் நகை, வீடு ஆகியவை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கியதை பற்றி பூபாலன் தனது தங்கையிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தங்க பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் பூபாலன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த காவலர்
மதுரை மாவட்டத்தில், மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த காவலரான கணவர் பூபாலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது தந்தை, தாய், தங்கை உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலான ஆடியோவுடன், மாநிலமெங்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தங்க பிரியா (32) என்பவரும், மதுரை மாவட்டம் காதக்கிண்று கிராமத்தைச் சேர்ந்த காவலர் பூபாலனும், 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தங்க பிரியாவுக்கும் பூபாலனுக்கும் 7 மற்றும் 5 வயதான இரண்டு ஆண்மக்கள் உள்ளனர். திருமணத்தின் போது 60 பவுன் நகை, புல்லட் பைக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேலும் வரதட்சணை கோரிக்கையுடன், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன.




பூபாலன் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய அவலம்
இந்நிலையில், குழந்தைகளின் காதணி விழாவை முன்னிட்டு, மேலும் 5 பவுன் நகை வழங்குமாறு வற்புறுத்திய பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினருடன், தங்க பிரியாவுக்கு தகராறு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, ஏற்பட்ட சண்டையின் போது, பூபாலன் தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். காயமடைந்த தங்க பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Also Read: திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்.. 3 பேர் கைது..
மனைவியை எப்படி அடித்தேன் என தங்கையிடம் விளக்கம்
மேலும், தன்னுடைய மனைவியை எப்படி தாக்கினேன் என்பதை, தனது தங்கைக்கு கிண்டலாக சிரித்தபடியே விவரிக்கும் பூபாலனின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், “வாயில் நகத்தால் கீறினேன், தொண்டையில் அடித்தேன், முட்டியில் காயம் செய்தேன்” என அவர் பேசுவதை அவரது தங்கை கேட்டு, “ஓவரா பேசினா அப்படி தான் நடக்கும்” என பதிலளிக்கிறார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பூபாலனுடன் சேர்த்து அவரது தந்தை செந்தில்குமார் (விருதுநகர் மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்), தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோருக்கும் எதிராக அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தற்போது அவர்களை தேடி வந்தனர்.
பூபாலன் தற்காலிகமாக பணிநீக்கம் -கைது
இதனிடையே, மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த காவலரான கணவர் பூபாலன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் பூபாலன் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், காவல்துறையில் பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பி, சமூக அக்கறையை தூண்டியுள்ளது.